வெவ்வேறு இடங்களில் விநாயகர் சிலை கரைப்பில் 13 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் விநாயகர் சிலை கரைப்பின் போது 13 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
வெவ்வேறு இடங்களில் விநாயகர் சிலை கரைப்பின் போது 13 பேர் உயிரிழந்தனர்.
சிலை கரைப்பு
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 19-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் வழிபாட்டுக்கு பிறகு நேற்று முன்தினம் சிலைகள் கரைக்கப்பட்டன. ஆனந்த சதுர்த்தி என்று அழைக்கப்படும் இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று 2-வது நாளாகவும் நீடித்தது. இந்த நிகழ்வுகளின் போது மாநிலம் முழுவதும் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 9 பேர் நீர்நிலைகளில் மூழ்கியும், மற்றவர்கள் இதர விபத்துகளிலும் சிக்கி உயிரிழந்தனர். இதில் தலைநகர் மும்பையில் உள்ள ஜூகு கடற்கரையில் சிலை கரைப்பு நிகழ்ச்சியை காண சென்ற 16 வயது சிறுவன் மின்னல் தாக்கி பலியானான். அவனது பெயர் வக்கோலா பகுதியை சேர்ந்த ஹசன் யூசுப் சேக் என்று தெரியவந்தது.
தண்ணீரில் மூழ்கினர்
நாசிக் பஞ்சவடியில் சிலை கரைப்புக்காக சென்ற 3 பேரும், நாசிக் ரோடு பகுதியில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல நாசிக் நகரில் அம்பாத் எம்.ஐ.டி.சி. அருகே உள்ள சுஞ்சாலே சிவாரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் சென்ற ருத்ரா ராஜு என்ற 6 வயது சிறுவன் டிராக்டர் மோதி பலியானான். உடன் சென்ற அவனது தந்தை படுகாயம் அடைந்தார். இதேபோல மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள கஜ்ரத், நாந்தெட் மாவட்டத்தில் உள்ள வஜிராபாத், சத்தராவில் உள்ள உம்ப்ராஜ் பகுதிகளில் தலா ஒருவர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்தனர். ரத்னகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது டெம்போ வேன் பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 17 வயது பெண் மற்றும் டெம்போ டிரைவர் உயிரிழந்தனர்.