ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த 14 பேர் கைது


ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த 14 பேர் கைது
x

ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறிய கடன், அதிக வசூல்

அவசர தேவைக்கு ரூ.1,000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக கடன் கிடைப்பது கடினம். இப்படிபட்டவர்களை குறிவைத்து மோசடி செய்ய உடனடி கடன் செயலிகள் பலவும் சமீபத்தில் முளைத்தன.

இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் பெறுபவர்களின் தரவுகள், புகைப்படங்களை திருடும் கும்பல் பின்னர் வாங்கிய சிறிய கடனுக்கு கூட அதிக வட்டி கேட்டு தொல்லை கொடுக்கின்றனர்.

அவர் கொடுக்கவில்லை என்றால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்களை ஆபாச மார்பிங் செய்து, இதை அவரின் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டுகின்றனர்.

இவர்களின் மிரட்டலுக்கு பயந்து பலரும் பெரும் தொகையை இழந்து வருகின்றனர்.

14 பேர் கைது

அந்த வகையில் ஒருவர் 10 கடன் செயலி மூலம் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். ஆனால் ரூ. 22 லட்சம் வரை அவர் திரும்பி செலுத்தியும் மேலும் பணம் கேட்டு கடன் செயலி நிறுவனத்தினர் மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். மேலும் பலர் இதேபோன்ற புகார் அளித்ததை அடுத்து மும்பை சைபர் கிரைம் போலீசார் இந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரப்படுத்தினர்.

இவர்களின் முயற்சியால் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கடந்த 2 வாரங்களில் கைது செய்துள்ளனர்.

அவர்கள் பெங்களூரு, ஆந்திரா, குர்கான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கிரிப்டோ கரன்சி

அவர்களிடம் இருந்து 39 செல்போன்கள், 211 சிம்கார்டுகள், 19 மடிக்கணினிகள், இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் 3 ரவுட்டர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதேபோல் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மோசடியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களின் தரவுகள், ரூ.14 கோடி மற்றும் 2.17 லட்சம் டாலர் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி ஆகியவற்றையும் போலீசார் மீண்டுள்ளனர்.

இவர்களின் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பறித்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளது தெரியவந்தது. இந்த கும்பலின் 350 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்த கும்பலுக்கு சர்வதேச தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நாட்டில் பல்வேறு பகுதிகளில் மோசடியில் ஈடுபட்ட அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோடியில் மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story