தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தொடர்புடைய வங்கி உள்பட 14 இடங்களில் சோதனை - அமலாக்கத்துறை அதிரடி

தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தொடர்புடைய வங்கி உள்பட 14 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தொடர்புடைய வங்கி உள்பட 14 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
வங்கி மோசடி வழக்கு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல். இவர் தொடர்புடைய ராஜாராம்பாபு சகாகாரி வங்கியில் (ஆர்.எஸ்.பி.எல்.) தணிக்கையாளர் ஒருவர் போலி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தணிக்கையாளர் போலி நிறுவனங்கள் மூலம் பொருட்கள் விற்றது போல ரசீது தயார் செய்து கமிஷன் பெற்று கொண்டு பிற நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் பணத்தை வங்கி மூலமாக கைமாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அளித்த புகாரின் போில் போலீசார் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை 3 ஆண்டுகளுக்கு முன் வழக்குப்பதிவு செய்தது.
14 இடங்களில் சோதனை
இந்தநிலையில் வங்கி மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சாங்கிலியில் உள்ள ராஜாராம் பாபு சகாகாரி வங்கி அலுவலகம் உள்பட 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் அமலாக்கத்துறை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர்கள், நிர்வாகிகள், தொழில் அதிபர் வீடுகளில் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக சோதனை நடத்தியது. இந்தநிலையில் அமலாக்கத்துறை தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் தொடர்புடைய வங்கியில் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






