நவிமும்பையில் ரூ.19 கோடி போதைப்பொருளுடன் 7 நைஜீரியர்கள் கைது
நவிமும்பையில் ரூ.19 கோடி போதைப்பொருளுடன் 7 நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
நவிமும்பையில் ரூ.19 கோடி போதைப்பொருளுடன் 7 நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் சோதனை
மும்பை பெருநகர பகுதிகளில் சட்டவிரோதமாக வசித்து வரும் நைஜீரியர்கள் போதைப்பொருள் விற்பனை போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அதிகளவில் போலீசாருக்கு புகார் வருகிறது. எனவே மும்பையில் சட்டவிரோதமாக தங்கி உள்ள நைஜீரியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் மும்பையை அடுத்த நவிமும்பையில் சில நைஜீரியர்கள் பெருமளவில் போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் வாஷி, கோபர்கிரைனே, கார்கர், தலோஜா போன்ற பகுதிகளில் நைஜீரியர்கள் தங்கி இருந்த இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
ரூ.19 கோடி போதைப்பொருள்
இந்த சோதனையின் போது கொகைகன், எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரை போன்ற போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சோதனையின் போது ரூ.19.05 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் உள்பட 7 நைஜீரியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.