அந்தேரியில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 2 பேர் கைது


அந்தேரியில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த  2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-28T00:17:26+05:30)

அந்தேரியில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

அந்தேரி புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரிக்கப்படுவது உறுதியானது. இது தொடர்பாக 62 வயது நபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சோதனையின்போது அங்கிருந்து 28 போலி பாஸ்போர்ட்டுகள், பல்வேறு நாடுகளின் 24 போலி விசாக்கள் மற்றும் பல போலி கொரோனா சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் பல நாடுகளின் போலி குடியேற்ற ரப்பர் ஸ்டாம்புகள், அரசு துணை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் பெயர் அடங்கிய 414 போலி ரப்பர் ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர். அதேபோல கொரோனா பரிசோதனை போலி சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசு நடத்தும் ஜே.ஜே. ஆஸ்பத்திரி அதிகாரிகளின் பெயரில் போலி ரம்பர் ஸ்டாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. தேசிய சின்னம் மற்றும் வருமான வரித்துறை சின்னம் அடங்கிய ஸ்டிக்கர்களையும் போலீசார் மீட்டனர். அவர்கள் சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய 3 கலர் பிரண்டர்கள், ஸ்கேனர்கள் மற்றும் 7 பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story