பெண் பயணியை ஆட்டோவில் கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற 2 ஆசாமிகள் - போலீசார் துரத்தி பிடித்தனர்


பெண் பயணியை ஆட்டோவில் கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற 2 ஆசாமிகள் - போலீசார் துரத்தி பிடித்தனர்
x
தினத்தந்தி 9 Sep 2023 7:45 PM GMT (Updated: 9 Sep 2023 7:45 PM GMT)

பெண் பயணியை ஆட்டோவில் கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேரை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர்.

தானே,

பெண் பயணியை ஆட்டோவில் கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேரை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர்.

பலாத்காரம் செய்ய முயற்சி

தானே மாவட்டம் கோலோகாவ் நாக்கா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கட்காலில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். இரவு 10.45 மணி அளவில் அவர் வீட்டுக்கு செல்ல அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோவில் டிரைவர் தவிர, மற்றொரு ஆணும் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் தான் இறங்கவேண்டும் என்று கூறிய இடத்தை தாண்டி ஆட்டோவை டிரைவர் வேகமாக செலுத்தி உள்ளார். இதனால் பெண் பதற்றம் அடைந்து சத்தம் போட்டுள்ளார். இந்த நிலையில் ஆட்டோவில் இருந்த மற்றொருவர் தான் வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து அந்த பெண்ணை சத்தம் போட்டால் குத்தி விடுவதாக மிரட்டினார். மேலும் ஆடைகளை கழற்றுமாறு பெண்ணை வற்புறுத்தியதுடன், அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.

கைது

இதனால் பயந்துபோன பெண் சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர்கள் அதுல் போய்யே மற்றும் சுதிர் ஆசே ஆகியோர் காதுகளில் விழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவை பின்தொடர்நது துரத்தி சென்றனர். போலீசார் தங்களை பிடிக்க வருவதை பார்த்தும் ஆட்டோவில் இருந்த 2 பேரும் அந்த பெண்ணை ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை துரத்தி சென்று சிறிது தூரத்தில் மடக்கினர். அப்போது ஆட்டோவில் இருந்தவர் போலீசாரை ஸ்க்ரு டிரைவரால் தாக்க முயற்சி செய்தார். இருப்பினும் போலீசார் அவரை சமாளித்ததுடன், 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் பிடிபட்டவர்கள் டிரைவரான பிரபாகர் பாட்டீல்(வயது 22) மற்றும் அவரது கூட்டாளி வைபவ் தாரே(19) என்பது தெரியவந்தது. வைபவ் தாரேவுக்கு எதிராக மும்ரா போலீசில் பல்வேறு வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இருவர் மீதும் கடத்தல், கிரிமினல் மிரட்டல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இரவில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை கற்பழிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story