2 குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை- தலைமறைவான தந்தை பிணமாக மீட்பு

சந்திராப்பூரில் 2 குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தை வார்தாவில் பிணமாக மீட்கப்பட்டார்.
சந்திராப்பூர்,
சந்திராப்பூரில் 2 குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தை வார்தாவில் பிணமாக மீட்கப்பட்டார்.
2 குழந்தைகள் பிணம்
சந்திராப்பூர் மாவட்டம் வரோரா தாலுகா போர்டாவை சேர்ந்தவர் சஞ்சய் காம்ப்ளே (வயது 42). டியூசன் ஆசிரியர். இவரது மனைவி பிரணிதா. தனியார் பார்மசியில் லேப் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் அஷ்மித் (வயது 7), மகள் மிஸ்தி காம்ளே(3).
நேற்று மாலை தாய் பணிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது அவரது குழந்தைகள் இருவரும் வீட்டில் மூச்சு, பேச்சு இன்றி அசையாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் பயந்துபோன அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தைகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது விட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை பிணமாக மீட்பு
இதற்கிடையே குழந்தைகளின் தந்தை சஞ்சய் காம்ளே தலைமறைவானதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் பக்கத்து மாவட்டமான வார்தாவில் உள்ள சகாரா கிராமத்தில் சாலையோரம் சஞ்சய் காம்ப்ளே இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தெரியவந்தது.
அவரது உடல் அருகே தற்கொலை கடிதம் மீட்கப்பட்டது. அதில், தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றதாக கூறியுள்ளார். இதற்காக தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் சஞ்சய் காம்ளே குடும்பத்தினர் மிகவும் நிதி நெருக்கடியால் தவித்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் தனது குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






