பெண் உள்பட 2 நக்சலைட்டுகள் போலீசில் சரண்- தலைக்கு தலா ரூ.6 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டவர்கள்

தலைக்கு தலா ரூ.6 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் உள்பட 2 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரணடைந்தனர்.
நாக்பூர்,
தலைக்கு தலா ரூ.6 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் உள்பட 2 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரணடைந்தனர்.
போலீசில் சரண்
கட்சிரோலி மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இந்தநிலையில் அவர்களை அமைதிப்பாதையில் திருப்பி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன் பலனாக நக்சலைட்டுகள் தொடர்ந்து சரண் அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தீவிர நக்சலைட்டுகளாக இருந்த ராம்சிங் என்கிற சீதாராம் பக்கா அத்ரம்(வயது 63) மற்றும் மாதுரி என்கிற சுமன் ராஜூ மட்டாமி(34) ஆகியோர் போலீசாரிடம் சரணடைந்தனர்.
தலைக்கு தலா ரூ.6 லட்சம்
இதில் பெண் நக்சலைட்டான சுமன் ராஜூ மட்டாமி 21 துப்பாக்கி சூடு சம்பவங்கள், 7 தீ வைப்பு சம்பவங்கள் மற்றும் 5 பிற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது 37 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். மூத்த மாவோஸ்டுகளின் மூலம் பாகுபாடுகளை எதிர்கொண்டதால் தான் சரணடைந்ததாக பெண் நக்சலைட்டு தெரிவித்துள்ளார்.
இதேபோல சிதாராம் பக்கா அத்ரம் நக்சலைட்டு படையின் துணை தளபதியாக செல்பட்டுள்ளார். இவர் மீது கொலை மற்றும் 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. சரணடைந்த 2 பேர் தலைக்கும் தலா ரூ.6 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டகள் ஆவார்.
தற்போது 2 பேரும் மறுவாழ்வுக்காக தலா ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் அரசிடம் இருந்து நிவாரணமாக பெறுவார்கள் என போலீசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு முதல் இதுவரை 49 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரணடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






