தானேயில் ரூ.2½ கோடி யானை தந்தங்களை கடத்திய 2 பேர் சிக்கினர்

தானேயில் ரூ2½ கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
தானேயில் ரூ2½ கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
யானை தந்தங்கள் பறிமுதல்
தானே அருகே கல்வா சிவாஜி சவுக் பகுதியில் யானை தந்தங்களுடன் 2 பேர் வரவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி 2 பேர் கையில் பையுடன் நடமாடி வந்ததை கண்டனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் அமித் வார்லிகர் (வயது42), சாகர் பாட்டீல் (40) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் நடத்திய சோதனையில் 34 செ.மீ. நீளமும், 8 செ.மீ. அகலமுடைய 1 கிலோ 400 கிராம் எடையுள்ள யானை தந்தங்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இதில் பெண்ணின் உருவம் மற்றும் வெளிநாட்டு மொழியிலான எழுத்துகள், எண்கள் இருந்ததை கண்டனர். இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் ஆகும். இதனை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட 2 பேரிடம் தந்தம் தொடர்பாக விசாரித்தனர்.
இதில் தாரா என்ற நபர் தங்களிடம் கொடுத்து விற்று வரும்படி அனுப்பியதாக கூறினர். இருப்பினும் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------------






