ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்களிடம் பணம் அபேஸ் செய்த 3 பேர் கைது

ஏ.டி.எம். மையங்களில் வங்கி கார்டை மாற்றி கொடுத்து பணத்தை அபேஸ் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
ஏ.டி.எம். மையங்களில் வங்கி கார்டை மாற்றி கொடுத்து பணத்தை அபேஸ் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் புகார்
நவிமும்பை தலோஜா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் உதவி செய்வதாக பாசாங்கு செய்து பணமோசடி நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோ ஒன்றில் வந்த கும்பல் ஏ.டி.எம். மையங்களில் மோசடி நடத்தியது தெரியவந்தது. போலீசார் அந்த ஆட்டோவின் பதிவெண் மூலம் அவர்களை தேடி வந்தனர்.
3 பேர் சிக்கினர்
இந்த நிலையில் அக்கும்பல் ஆட்டோவில் உல்லாஸ்நகர் பகுதிக்கு செல்வதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஆட்டோவில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் உல்லாஸ்நகரை சேர்ந்த கணேஷ் லோண்டே (வயது24,) அஜய் யாதவ் (25), அம்பர்நாத்தை சேர்ந்த விக்கி பிள்ளை (28) எனவும், அவர்களிடம் நடத்திய சோதனையில் 97 டெபிட் கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் மும்பை, தானே, ராய்காட், புனே, ரத்னகிரி, லாத்தூர் ஆகிய இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் உதவி செய்வதாக கூறி ரகசிய நம்பரை தெரிந்து கொண்டு பின்னர் கார்டை மாற்றி கொடுத்து வந்தனர்.
இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் அபேஸ் செய்த கார்டுகள் மூலம் பணத்தை எடுத்து வந்ததாக தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






