சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது
சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் தனது பெல்ட்டில் தங்கதுகள்களை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அதில் 1 கிலோ 79 கிராம் எடையுள்ள தங்கதுகள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பயணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதேபோல சார்ஜாவில் இருந்து வந்த மற்றொரு பயணி கொண்டு வந்த மிக்சி, கிரைண்டர் எந்திரத்தில் அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அந்த எந்திரங்களுக்குள் 1 கிலோ 38 கிராம் எடையுள்ள தங்ககட்டிகள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்த பயணியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் தங்கம் கடத்தி வந்த 2 பேரும் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இரு வேறு சம்பவங்களில் மொத்தம் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.