கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது
கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
புனே,
சத்தாரா மேன் தாலுகா பன்வான் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 26-ந் தேதி கால்நடைக்கு தீவனம் வாங்க அதே பகுதியை சேர்ந்த தேவ்தாஸ் நாராலே என்பவரிடம் கடன் கொடுத்து இருந்தார். இதன் பிறகு தேவதாஸ் நாராலே பணத்தை திருப்பி தராமல் இருந்தார். இதனால் அப்பெண் அவரை சந்தித்து கடனாக கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு உள்ளார். இதற்கு அவர் அப்பெண்ணை மிரட்டி உள்ளார். இதன்பிறகு அவர் தனது கூட்டாளிகளான மேலும் 2 பேரை அழைத்து கொண்டு பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த பெண்ணை கிராம மக்கள் முன்னிலையில் தாக்கிவிட்டு அவர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரல் ஆனது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் சம்பவம் குறித்து மாஸ்வாட் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை தாக்கிய தேவதாஸ் நாராலே, சந்தோஷ் ஷிண்டே ஜனப்பா ஷிண்டே ஆகிய 3 பேரை கைது செய்தனர்.