மும்பை துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்த 3 மாணவர்கள் கைது
மும்பை துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
மும்பையை சேர்ந்த வாலிபர்கள் கவுரவ் வாகல்(வயது27), ஸ்ரேயாஸ் சூரி(25) மற்றும் அபிஷேக் மங்கோங்கர்(24). இவர்கள் 3 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் உணவு சாப்பிட சென்றனர். அப்போது, அவர்கள் மும்பை துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக தெரிகிறது. அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களது காரை வழிமறித்து சோதனையிட்டனர். அந்த நேரத்தில் திடீரென காரை வேகமாக செலுத்திய மாணவர்கள் தொழில் பாதுகாப்பு படையினரின் பிடியில் இருந்து தப்பினர். அப்போது, சோதனை பணியில் இருந்த அதிகாரி ஒருவரின் 20 தோட்டாக்கள் அடங்கிய கேட்ரிட் அவர்களின் காருக்குள் தவறி விழுந்துவிட்டது. இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எல்லோ கேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தப்பியோடிய வாலிபர்களை அடையாளம் கண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் காரில் இருந்த தோட்டாக்களையும் மீட்டனர்.