அலங்கார பொருள் குடோனில் பயங்கர தீ; 3 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு

புனேயில் அலங்கார பொருள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள்.
புனே,
புனேயில் அலங்கார பொருள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள்.
குடோனில் பயங்கர தீ
புனே உபாலே நகர் வாக்கோலி பகுதியில் உள்ள குடோனில் திருமண மண்டபத்துக்கு பந்தல் அமைக்கும் அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. குடோனில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அலங்கார பொருட்கள் என்பதால் குடோனில் தீ வேகமாக பரவியது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் 9 தீயணைப்பு வாகனங்களில் விரைந்தனர். தீயணைப்பு படையினர் சென்றபோது, குடோன் காட்டு தீ போல எரிந்து கொண்டு இருந்தது. குடோனில் இருந்த 4 சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.
3 தொழிலாளர்கள் பலி
முதல்கட்டமாக தீயணைப்பு படையினர் குடோனுக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்த 400 கியாஸ் சிலிண்டர்களை வேறு இடத்துக்கு மாற்றினர். மேலும் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது தீயில் உடல் எரிந்த நிலையில் 3 தொழிலாளர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






