அரசு பள்ளிகளில் புதிதாக 30 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

அரசு பள்ளிகளில் புதிதாக 30 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வி மந்திரி தீபக் கேசர்கர் கூறினார்.
மும்பை,
அரசு பள்ளிகளில் புதிதாக 30 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வி மந்திரி தீபக் கேசர்கர் கூறினார்.
ஆசிரியர் நியமனம்
மராட்டியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டுக்குள் புதிய ஆசிரியர்களை பணி அமர்ந்தும் நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை மந்திரி தீபக் கேசர்கர் நேற்று கூறியதாவது:-
மாநில பள்ளிக்கல்வி துறை முதற்கட்டமாக 30 ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய உள்ளது. இந்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டு வருகிறோம். புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படும். நேர்காணல் நடைமுறையும் பின்பற்றப்படும்.
2-வது கட்டமாக...
அதைதொடர்ந்து 2-வது கட்டமாக மேலும் 20 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது. மாணவர்களின் ஆதார் சரிபார்ப்பு பணிகள் முடிந்ததும், 2-வது கட்டத்தில் பணி அமர்த்தப்படவேண்டிய ஆசிரியர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






