பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து மும்பை கட்டுமான நிறுவனம் ரூ.3,800 கோடி மோசடி - சி.பி.ஐ. வழக்குப்பதிவு


பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து மும்பை கட்டுமான நிறுவனம் ரூ.3,800 கோடி மோசடி - சி.பி.ஐ. வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 800 கோடி மோசடி செய்ததாக மும்பை கட்டுமான நிறுவன நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

மும்பை,

பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 800 கோடி மோசடி செய்ததாக மும்பை கட்டுமான நிறுவன நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

மோசடி

மும்பையை சேர்ந்த யூனிட்டி இன்ப்ராபிராஜெக்ட் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனத்தின் மீது பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) துணை பொது மேலாளர் சார்பில் சி.பி.ஐ. போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் கூறியிருந்ததாவது:- எஸ்.பி.ஐ. மற்றும் சார்பு வங்கிகளின் மூலமாக யூனிட்டி இன்ப்ராபிராஜெக்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு சுமார் ரூ.3 ஆயிரத்து 800 கோடிக்கு நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. மோசடி பரிவர்த்தனைகள் மூலம் பல்வேறு குளறுபடிகளை செய்தும், தரவுகளை ஏமாற்றி முறையற்ற கணக்குகளை வழங்கியும், தவறான கணக்குகள் மூலம் நிதி ஆதாரத்தை திசை திருப்பியும் பல்வேறு முறைகளில் எஸ்.பி.ஐ. மற்றும் அதன் பிற சார்பு வங்கிகளில் இருந்து இந்த மோசடி செய்யப்பட்டு உள்ளது. மோசடிக்கு காரணமான நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

வழக்குப்பதிவு

இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் கிஷோர் கிருஷ்ணராவ் அவர்சேகர், முன்னாள் இயக்குனர்கள், நிர்வாகிகள் மற்றும் சில அடையாளம் காணப்படாத வங்கி ஊழியர்கள் மற்றும் தனிநபர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. முதல் கட்ட தகவலின்படி இவர்கள் மீது குற்றவியல் சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக மும்பையில் 4 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.


Next Story