10 ஆண்டுகளாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேர் கைது- தமிழகத்தை சேர்ந்தவர்கள்


10 ஆண்டுகளாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேர் கைது- தமிழகத்தை சேர்ந்தவர்கள்
x

கடந்த 10 ஆண்டாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

கடந்த 10 ஆண்டாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

செல்போன் திருட்டு

மகாராஷ்ட்ரா வங்கியில் உதவி மேலாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 17-ந் தேதி அவர் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தனது மேஜையில் வைத்திருந்தார். கழிவறை சென்ற அவர் திரும்பி வந்து பார்த்த போது செல்போன் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது.

இதனால் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வங்கியில் நுழைந்த ஒருவர் கையில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வைத்து கொண்டு நைசாக உள்ளே நுழைந்து செல்போனை திருடி சென்றது அதில் பதிவாகி இருந்தது. இதன்படி பெண் உதவி மேலாளர் போலீசில் புகார் அளித்தார்.

தாராவியில் சிக்கினர்

இந்த புகாரின் படி போலீசார் செல்போனை திருடிய நபரின் புகைப்படம் மற்றும் செல்போனின் சிக்னல் குறித்து விசாரணை நடத்தினர். இந்த சிக்னல் தாராவி பகுதியில் கிடைத்து இருப்பதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தாராவி சென்று புகைப்படத்தை வைத்து விசாரித்தனர். அங்கிருந்த லாட்ஜில் அந்த நபர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அறையில் பதுங்கி இருந்த 4 பேரை பிடித்தனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த வடிவேல் போயர் (வயது36) எனவும் அவருடன் தங்கி இருந்த சகோதரர்களான மஞ்சுநாத், கோவிந்தசாமி, மகாவீரன் ஆகியோர் எனவும் தெரியவந்தது.

கடந்த 10 ஆண்டாக திருட்டு

இவர்களிடம் நடத்திய சோதனையில் உதவி பெண் மேலாளரிடம் இருந்து திருடப்பட்ட செல்போன் இருந்ததை பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த இவர்கள் துணி வியாபாரிகள் போல் நடித்து தாராவி லாட்ஜில் தங்கி இருந்தனர். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் இருந்ததை போலீசார் கண்டனர். இதனை வைத்து கொண்டு முக்கிய நபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று வருமானம் பார்த்து வந்தனர்.

மேலும் கடந்த 10 ஆண்டாக மும்பை நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்கள் மீது மும்பை உள்பட தமிழகத்திலும் மோசடி வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.


Next Story