ரூ.58 லட்சம் கலப்பட சாக்லெட் பறிமுதல்

அம்பர்நாத் எம்.ஐ.டி.சி. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரூ.58 லட்சம் கலப்பட சாக்லெட்டை உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அம்பர்நாத்,
அம்பர்நாத் எம்.ஐ.டி.சி. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரூ.58 லட்சம் கலப்பட சாக்லெட்டை உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாக்லேட் பறிமுதல்
தானே மாவட்டம் அம்பர்நாத் எம்.ஐ.டி.சி. ஆனந்த் நகர் பகுதியில் கலப்பட சாக்லெட் தயாரிக்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் கலப்பட பொருட்கள் கொண்டு தரம் குறைந்த சாக்லெட் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்த ரூ.58 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள கலப்பட சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் கலப்பட சாக்லெட் தயாரித்து வந்த தொழிற்சாலையின் உற்பத்தியை நிறுத்தினர். சாக்லெட்டின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இழுத்து மூட உத்தரவு
இது குறித்து உதவி கமினஷர் சவான் தெரிவிக்கையில், "தீபாவளியையொட்டி நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களை வழங்குவதை உறுதியாக உள்ளோம். மார்க்கெட்டில் வியாபார நோக்கத்திற்காக கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது சாக்லெட் நிறுவனத்தில் அதற்கான சட்டவிதிகளின் படி உபயோகப்படுத்தாமல் தரம் குறைந்த வகையில் தயாரித்து வந்ததால் தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் தொழிற்சாலை நிறுவனத்திற்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.






