உத்தவ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் சிவசேனாவில் சேர உள்ளனர் - நிதேஷ் ரானே சொல்கிறார்

உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர உள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது.
மும்பை,
உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர உள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது.
6 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுகின்றனர்
அஜித்பவார் மாநில அரசில் இணைந்ததால், ஏக்நாத் ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு திரும்பி வர திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நிதேஷ் ரானே எம்.எல்.ஏ. கூறியதாவது:-
மழைக்கால கூட்டத்தொடர் அல்லது அதற்கு முன் உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர உள்ளனர். மழைக்கால கூட்டத்தொடரில் அம்பாதாஸ் தான்வே மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக இருக்க மாட்டார்.
சஞ்சய் ராவத் விரிசலை ஏற்படுத்தினார்
உத்தவ்தாக்கரே, ராஜ் தாக்கரேக்கு இடையே விரிசலை உருவாக்கியவர் சஞ்சய் ராவத். உத்தவ் தாக்கரே அவுரங்சீப் சித்தாந்தம் நோக்கி செல்வதால் அவரால் உடனடியாக பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி வைக்க முடிகிறது. ஆனால் இந்துத்வாவை பின்பற்றும் ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி வைக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அஜித்பவார் வருகையால் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக சஞ்சய் ராவத் கூறிய நிலையில், உத்தவ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு செல்ல உள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






