பொது சிவில் சட்ட விளைவுகளை ஆய்வு செய்ய 9 நபர் கமிட்டி - மாநில காங்கிரஸ் அமைத்தது

பொது சிவில் சட்ட விளைவுகளை ஆய்வு செய்ய மராட்டிய காங்கிரஸ் கட்சி 9 நபர் கமிட்டியை அமைத்து உள்ளது.
மும்பை,
பொது சிவில் சட்ட விளைவுகளை ஆய்வு செய்ய மராட்டிய காங்கிரஸ் கட்சி 9 நபர் கமிட்டியை அமைத்து உள்ளது.
ஆய்வு செய்ய கமிட்டி
மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. 22-வது மத்திய சட்டக்கமிஷன் பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத அமைப்புகளிடம் கருத்துகளை கேட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் அவசியம் என பேசினார். இந்தநிலையில் பொது சிவில் சட்டத்தின் விளைவுகளை ஆய்வு செய்ய முன்னாள் மும்பை பல்கலைக்கழக துணை வேந்தர் பால்சந்திரா முங்கேகர் தலைமையில் 9 நபர் கமிட்டியை மராட்டிய காங்கிரஸ் அமைத்து உள்ளது. கமிட்டியில் ராஜ்ய சபா எம்.பி. குமார் கேத்கர், கட்சியின் மூத்த தலைவர்கள் வசந்த் புர்கே, ஹூசைன் தால்வி, அனீஸ் அகமது, கிஷோரி காஜ்பியே, அமர்ஜித மன்காஸ், ஜன்னத் டி-சோசா, ரவி ஜாதவ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
அறிக்கை தாக்கல் செய்யும்
கமிட்டி அமைக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சி சமூகத்தினருக்கு தனி சட்டங்கள் உள்ளன. இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின், புத்த மதத்தினர் இந்து சிவில் சட்டத்தின் கீழ் வருகின்றனர். பொது சிவில் சட்டம் எந்த மதத்துக்கும் தொடர்பில்லாதது. எல்லா மக்களுக்கும் பொதுவானது. திருமணம் போன்ற விவகாரங்களில் தென்னிந்தியர்கள், கிழக்கு இந்தியர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவர்கள் சார்ந்த விதிகள் உள்ளன. பொது சிவில் சட்டம் தங்கள் மத விவகாரத்தில் தலையிடுவதாக சிறுபான்மையின மக்கள் கருதுகின்றனர். பொதுசிவில் சட்டம் குறித்து ஒவ்வொரு மதத்தினரிடமும் வெவ்வேறு கருத்து உள்ளது. எனவே பால்சந்திரா முங்கேகர் தலைமையிலான கமிட்டி பொது சிவில் சட்டத்தை ஆய்வு செய்து மாநில தலைவர் நானா படோலேவிடம் அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






