நோயாளிகளை தனியார் ஸ்கேன் மையத்துக்கு அனுப்பிய வழக்கு: டாடா புற்றுநோய் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 11 பேர் கைது


நோயாளிகளை தனியார் ஸ்கேன் மையத்துக்கு அனுப்பிய வழக்கு: டாடா புற்றுநோய் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 11 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2023 7:30 PM GMT (Updated: 19 July 2023 7:31 PM GMT)

நோயாளிகளை தனியார் ஸ்கேன் மையத்துக்கு அனுப்பிய வழக்கில் டாடா புற்றுநோய் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

நோயாளிகளை தனியார் ஸ்கேன் மையத்துக்கு அனுப்பிய வழக்கில் டாடா புற்றுநோய் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

டாடா நினைவு ஆஸ்பத்திரி

மும்பையில் உள்ள டாடா நினைவு ஆஸ்பத்திரி புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பெயர் பெற்றதாகும். நாடு முழுவதிலும் இருந்து இங்கு சிகிச்சை பெற நோயாளிகள் வருகின்றனர்.இந்த ஆஸ்பத்திரியை சேர்ந்த சில ஊழியர்கள் தனியார் மருத்துவ பரிசோதனை மையத்திடம் கமிஷன் பெற்றுக்கொண்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அந்த பரிசோதனை மையத்துக்கு செல்ல அறிவுறுத்தி வந்தனர். டாடா ஆஸ்பத்திரியில் ஸ்கேன் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று கூறி அவர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளனர்.அந்த தனியார் பரிசோதனை மையத்தில் அதிக தொகை கட்டணமாக பெறப்பட்டு உள்ளது. இதன்மூலம் நோயாளிகளுக்கும், அரசுக்கும் அவர்கள் பல லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அதிரடி கைது

இது குறித்து டாடா ஆஸ்பத்திரி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதன்பேரில் கடந்த 16-ந் தேதி டாடா ஆஸ்பத்திரி ஊழியர்கள், தனியார் ஆய்வக ஊழியர்கள் உள்பட 21 பேர் மீது போய்வாடா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் டாடா நினைவு ஆஸ்பத்திரியை சேர்ந்த உதவி நிர்வாக அதிகாரி, வார்டுபாய், ஊழியர் மற்றும் துப்புரவு பணியாளர் உள்பட 11 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story