அயோத்தி கோவிலில் ராமர் சிலை நிறுவும்போது நாடு முழுவதும் கோவில்களில் விழா ஏற்பாடு செய்யவேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் வேண்டுகோள்


அயோத்தி கோவிலில் ராமர் சிலை நிறுவும்போது  நாடு முழுவதும் கோவில்களில் விழா ஏற்பாடு செய்யவேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Oct 2023 7:00 PM GMT (Updated: 24 Oct 2023 7:00 PM GMT)

அயோத்தி கோவிலில் ராமர் சிலை நிறுவும் போது நாடு முழுவதும் கோவில்களில் விழா ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

மும்பை,

அயோத்தி கோவிலில் ராமர் சிலை நிறுவும் போது நாடு முழுவதும் கோவில்களில் விழா ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

தசரா கூட்டம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் நாக்பூரில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் விஜயதசமி தினத்தன்று தசரா பொதுக்கூட்டம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஆர்.எஸ்.எஸ்.சின் தசரா கூட்டம் நாக்பூரில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் கலந்துகொண்டார். அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பை மோகன் பகவத் ஏற்றுக்கொண்டார். பின்னர் விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:-

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது

மணிப்பூரில் மெய்தி, குகி இன மக்கள் நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் எல்லை மாநிலம். அங்கு நடைபெறும் பிரிவினைவாதம், மோதல்களால் பயன் அடைய போவது யார்?. வெளியில் உள்ளவர்களும் பயன் அடைவார்கள். மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு வெளியாட்களின் பங்கு உள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் மணிப்பூரில் இருந்தார். மணிப்பூர் வன்முறைக்கு எண்ணெய் ஊற்றியவர் யார்?. அங்கு வன்முறை ஏற்படவில்லை. அது ஏற்படுத்தப்பட்டது. அங்கு அமைதி திரும்பும் நிலை வரும்போது, சில சம்பவங்கள் நடக்கின்றன. அது சமூகங்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கிறது. இதுபோன்ற செயல்களை செய்தவர்களின் பின்னணியில் இருப்பது யார்?. வன்முறையை தூண்டுவது யார்?. மணிப்பூர் கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. மணிப்பூரில் அமைதி திரும்ப உழைத்த சங்பரிவார்களை நினைத்து பெருமை அடைகிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக உணர்ச்சிகளை தூண்டி வாக்குகளை சேகரிக்கும் முயற்சிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் சிலை

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அடையாளம் மற்றும் வளர்ச்சியை மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். கலாசார மார்க்சிஸ்டுகள், கிளர்ச்சி கும்பல்கள் குழப்பம், ஊழல், அராஜகத்தை ஊக்குவிக்கின்றன. நாட்டின் கல்வி மற்றும் கலாசாரத்தை கெடுக்கின்றனர். அயோத்தி ராமர் கோவிலில் வருகிற ஜனவரி 22-ந்தேதி ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அதை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் நாடு முழுவதும் கோவில்களில் விழாக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story