ஒர்லியில் கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பி தவறி விழுந்து ஒருவர் படுகாயம்

ஒர்லி பகுதியில் கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பி தவறி விழுந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்
மும்பை,
மும்பை ஒர்லி நாக்கா அன்னிபெசன்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த கட்டிடம் அருகே நேற்று முன்தினம் மாலையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார். அப்போது, கட்டிடத்தின் மாடியில் இருந்து பெரிய இரும்பு கம்பி ஒன்று திடீரென தவறி கீழே விழுந்தது. அந்த கம்பி அங்கு நிறுத்தி இருந்த டெம்போ மீது விழுந்ததுடன் மோட்டார் சைக்கிளில் நின்றவர் மீதும் உரசியது. இந்த சம்பவத்தில் அந்த நபர் தலையில் பலத்த காயமடைந்தார். இரும்பு கம்பி விழுந்த சம்பவத்தில் டெம்போவின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






