காதலிக்க மறுத்ததால் 12 வயது சிறுமியை குத்திக்கொன்ற வாலிபர்- அதிர்ச்சி தகவல்

காதலிக்க மறுத்ததால் சிறுமி குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கைதான வாலிபரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
தானே,
காதலிக்க மறுத்ததால் சிறுமி குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கைதான வாலிபரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
குத்திக்கொலை
தானே மாவட்டம் கால்யாணில் உள்ள டிஸ்கான் பகுதியை சேர்ந்த வாலிபர் ஆதித்ய காம்ப்ளே(வயது20). இவர் அதே பகுதியை சேர்ந்த அடிக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும், 12 வயது சிறுமியை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பலமுறை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தப்பி ஓடமுயன்ற வாலிபரை அக்கம்பக்கத்தினர் சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது அவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் பினாயிலை குடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஒரு தலைகாதல்
இந்த நிலையில் கைதான வாலிபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுமியை கொலை செய்த வாலிபர் அவளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சிறுமி அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டார். எனவே சிறுமியின் நடமாட்டம் குறித்து அறிந்துகொள்ள அவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆதித்ய காம்ப்ளே அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு டியூஷன் வகுப்புக்கு சென்றுவிட்டு தாயுடன் வீடு திரும்பிக்கொண்டு இருந்த சிறுமியை வழிமறித்து கொலை வெறியாட்டம் ஆடி உள்ளார். மேலும் தானும் தற்கொலை செய்துகொள்ள பினாயிலை குடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆதித்ய காம்ப்ளே மீது கொலை, தற்கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






