மின்சார ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வாலிபருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம்.

நவிமும்பை பன்வெலில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி சென்ற மின்சார ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வாலிபருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
மும்பை,
நவிமும்பை பன்வெலில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி மின்சார ரெயில் முதல் வகுப்பு பெட்டியில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி உல்வேயை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் பயணித்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் ஜோசப், சுனில் ஆகிய 2 பேர் முதல் வகுப்பு பெட்டியில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் சோதனை போட்டனர். அப்போது வாலிபரிடம் நடத்திய சோதனையில் டிக்கெட் இன்றி ஓசிப்பயணம் மேற்கொண்டது தெரியவந்தது. இதற்காக அபராதம் செலுத்துமாறு டிக்கெட் பரிசோதகர் ஜோசப் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர் டிக்கெட் பரிசோதகரை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளார். இது குறித்து ரெயில்வே போலீசார் பயணியை பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து பயணிக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.






