நடிகை கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க முடியாது- ஐகோர்ட்டு உத்தரவு


நடிகை கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க முடியாது- ஐகோர்ட்டு உத்தரவு
x

மராத்தி நடிகையின் கற்பழிப்பு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.

மும்பை,

மராத்தி நடிகையின் கற்பழிப்பு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.

கற்பழிப்பு வழக்கு

மராத்தி நடிகை ஒருவர் தன்னை சித்தார்த் பந்தியா என்பவர் கற்பழித்துவிட்டதாக 2013-ம் ஆண்டு புனே போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரில், "சித்தார்த் பந்தியா கடந்த 2008-ம் ஆண்டு என்னை சந்தித்தார். எங்களது உறவு நெருக்கமானதை தொடர்ந்து 2010-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டோம். இந்த நிலையில் சித்தார்த் பந்தியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அவருக்கு 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

ஆனால் பாந்தியா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி போலியான, ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை காட்டி என்னை சமாதானப்படுத்தினார். 1 ஆண்டு கழித்து தான் அவர் அளித்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து கற்பழித்த சித்தார்த் பந்தியா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் சித்தார்த் பந்தியா மீது கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

மனு தாக்கல்

இந்த நிலையில் சித்தார்த் பந்தியா தனது மீதான கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், "நடிகையுடனான தனது உறவு அவருடைய சம்மதத்துடனேயே நடந்தது. அதுமட்டும் இன்றி எங்களுக்குள் நடைபெற்ற திருமணம் படப்பிடிப்புக்காக நடந்தது. அது உண்மையானது அல்ல" என்றார்.

இந்த வழக்கு நீதிபதி ஜே. ஜமாதார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகை சார்பில் ஆஜரான வக்கீல், "மனுதாரர் திருமணமானவர். இருந்தாலும் அதை மறைத்து நடிகையை தனது சட்டப்பூர்வ மனைவியாக ஏற்றுக்கொண்டதாக ஏமாற்றி உடல் உறவுக்கு சம்மதம் பெற்றுள்ளார். எனவே இந்த உறவை ஒப்புதலுடன் கூடிய உறவாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

மனு தள்ளுபடி

நடிகை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

புகார்தாரரான நடிகைக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் திருமணம் நடைபெற்றதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன. தவறான நம்பிக்கையின் கீழ் உடலுறவு நடந்துள்ளது. எனவே கற்பழிப்பு வழக்கின் கீழ் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்ய போதுமான காரணங்கள் உள்ளன. எனவே மனுதாரரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

---------


Next Story