விவாகரத்து வழக்கில் அதிரடி; அமெரிக்கா செல்லும் பெண்ணுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை - 'குழந்தையை கணவர் பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் சொத்தை இழக்க நேரிடும்'


விவாகரத்து வழக்கில் அதிரடி; அமெரிக்கா செல்லும் பெண்ணுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை - குழந்தையை கணவர் பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் சொத்தை இழக்க நேரிடும்
x
தினத்தந்தி 19 Sept 2023 1:15 AM IST (Updated: 19 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்கா செல்லும் பெண் தனது குழந்தையை கணவர் பார்க்க அனுமதிக்காவிட்டால் அவர் சொத்தை இழக்க நேரிடும் என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

அமெரிக்கா செல்லும் பெண் தனது குழந்தையை கணவர் பார்க்க அனுமதிக்காவிட்டால் அவர் சொத்தை இழக்க நேரிடும் என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அமெரிக்க குடியேற்றம்

புனேவை சேர்ந்த தம்பதி கடந்த 2020-ம் ஆண்டு பரஸ்பரம் ஒப்புதலுடன் விவாகரத்து செய்துகொண்டனர். ஆனால் பெண் குழந்தை தொடர்பான உரிமை கோரி 2 பேரும் புனேயில் உள்ள குடும்ப நலக் கோர்ட்டை நாடினர். கோர்ட்டு குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பை தாய்க்கு வழங்கியது. இருப்பினும் தந்தை குழந்தையை பார்ப்பதற்கும், பேசுவதற்கும் எந்த தடையும் இல்லை என்று தெரிவித்து இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் இரு தரப்பினரும், குழந்தைக்கு உரிமை கோரி பல்வேறு மனுக்கள் மற்றும் விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் விவகாரத்து செய்த பெண் தனது மைனர் பெண் குழந்தையுடன் அமெரிக்காவுக்கு குடியேற அனுமதி கேட்டு மும்பை ஐகோர்ட்டை அணுகினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.பி.கொலப்வாலா, எம்.எம். சதாயே அடங்கிய அமர்வு, கணவர், மனைவி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

கணவர் அச்சம்

இதைதொடர்ந்து தம்பதியினர் ஐகோர்ட்டில் தங்கள் ஒப்புதல் நிபந்தனைகளை தாக்கல் செய்தனர். இதில் கணவர் தனது மகளை தாயுடன் அமெரிக்காவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டார். ஆனால் மகளை காணொளி காட்சி மூலமாக சந்தித்து பேசவும், நேரில் சென்று பார்க்கவும் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதேபோல அந்த பெண், கணவருக்கு எதிராக கொடுத்த சில கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இருப்பினும் கணவர், தனது மகளை பார்ப்பதற்கான ஒப்பந்த விதிமுறைகளை கோர்ட்டு வழங்கி இருந்தாலும், அது செயல்படுத்தப்படும் என்ற எந்த உறுதியும் இல்லை. மேலும் பெண் இந்திய கோர்ட்டுகளின் அதிகார வரம்பிற்கு வெளியே இருப்பார் என்பதால் அதை செயல்முறை படுத்த முடியாது என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்.

50 சதவீத சொத்து

இந்த நிலையில் கோர்ட்டு மைனர் பெண்ணை அமெரிக்க அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது. இருப்பினும் கணவரின் அச்சத்திற்கு முகாந்திரம் இருப்பதாக கருதிய ஐகோர்ட்டு தனது தரப்பில் கூறியதாவது:- பெண் குழந்தையை வெளிநாட்டுக்கு அழைத்துசெல்லப்பட்ட பின்பு ஒப்பந்த விதிமுறைகள் மீறப்பட்டால், அவர் மீது கணவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம். அதில் அவர் வேண்டுமென்றே கோர்ட்டின் உத்தரவுக்கு கீழ்படியவில்லை என்று தெரியவந்தால் புனேயில் பெண் பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 50 சதவீத பங்கு அவரது கணவர் பெயருக்கு மாற்றப்படும். பெண் தனது பங்கை விட்டுக்கொடுக்கவில்லை என்றாலும், அவரது கணவரின் பெயருக்கு பங்கை மாற்றும் சுதந்திரம் கோர்ட்டுக்கு உள்ளது. இவ்வாறு அவர்கள் தீர்ப்பில் கூறினர்.


Next Story