மந்திரி சபையில் அஜித்பவார் இணைந்தது ஏக்நாத் ஷிண்டே பதவி பறிபோவதற்கான தொடக்கம் - சஞ்சய் ராவத் கூறுகிறார்


மந்திரி சபையில் அஜித்பவார் இணைந்தது  ஏக்நாத் ஷிண்டே பதவி பறிபோவதற்கான தொடக்கம் - சஞ்சய் ராவத் கூறுகிறார்
x
தினத்தந்தி 2 July 2023 7:30 PM GMT (Updated: 2 July 2023 7:31 PM GMT)

மராட்டிய மந்திரி சபையில் அஜித்பவார் இணைந்தது ஏக்நாத் ஷிண்டே பதவி பறிபோவதற்கான தொடக்கம் என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் கூறுகிறார்.

மும்பை,

மராட்டிய மந்திரி சபையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் தனது கட்சி சகாக்களுடன் இணைந்துள்ளார். துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் மீண்டும் ஆகி இருக்கிறார். கட்சியின் முக்கிய தலைவர்கள் பா.ஜனதா கூட்டணி பக்கம் தாவியதால் இந்த புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

இந்த பதவியேற்பு விழா ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவியை இழப்பதற்கான தொடக்க நிகழ்ச்சியாகும். அவரது எம்.எல்.ஏ.க்கள், மந்திரிசபை உறுப்பினர்கள் பதவியில் இருந்து விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதற்கு பிறகும் அரசு தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக தான், அஜித்பவாரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களும் இந்த அரசில் இணைந்துள்ளனர். இது அரசியலில் ஏற்பட்ட பெரிய பூகம்பம் ஒன்றும் இல்லை. இந்த அரசியல் மாற்றத்தை ஒரு அரசு 3 என்ஜினுடன் இயங்கப்போவதாக பார்க்கக்கூடாது. 2 என்ஜின்களில் ஒன்று விரைவில் தோல்வி அடையும். இவ்வாறு அவர் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களின் இந்த முடிவு குறித்து தலைவர் சரத்பவாருக்கு முன் கூட்டியே தெரியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், "அவருக்கு இதுபற்றிய அனைத்து தகவலும் தெரிந்தே இருந்தது. ஆனால் ஊழல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை தினமும் விமர்சிக்கும் பா.ஜனதா தலைவர்களிடம் இதுகுறித்து நீங்கள் கேட்க வேண்டும்" என்றார்.


Next Story