ஷிண்டேவுக்கு பதிலாக அஜித்பவார் முதல்-மந்திரி ஆவார் - இலாகா ஒதுக்கீடு குறித்து சஞ்சய் ராவத் கருத்து

மும்பையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பதிலாக அஜித்பவார் முதல்-மந்திரி ஆக வாய்ப்பு உள்ளது என இலாகா ஒதுக்கீடு குறித்து பேசிய சஞ்சய் ராவத் கூறியுள்ளார்
மும்பை,
பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் உள்ளிட்ட முக்கிய மந்திரிகள் சமீபத்தில் இணைந்தனர். இதில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இவர்கள் 9 பேருக்கும் இலாகா ஒதுக்கீடு நேற்று செய்யப்பட்டது. இதில் அஜித்பவாருக்கு நிதி துறையும், தனஞ்செய் முண்டேவுக்கு வேளாண்துறையும், திலீப் வால்சே பாட்டீலுக்கு கூட்டுறவு துறையும் வழங்கப்பட்டது. இதுகுறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், "வரும் நாட்களில் அஜித்பவார் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏக்நாத் ஷிண்டே அந்த பதவியில் இருந்து தூக்கி எரியப்படுவது உறுதி" என்றார். இதேபோல மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரான அம்பாதாஸ் தன்வே கூறுகையில், "உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்ட சிவசேனாவின் 40 எம்.எல்.ஏ.க்களை காலம் பழிவாங்க தொடங்கி உள்ளது. ஷிண்டே அணி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மகா விகாஸ் அகாடி அரசில் இருந்து விலகியபோது, அப்போது நிதி துறை மந்திரியாக இருந்த அஜித்பவார் தங்களுக்கு வேண்டிய நிதியை ஒதுக்க தவறியதாக குற்றம் சாட்டினார். ஆனால் இன்று அதே நபர் நிதி மந்திரி ஆகி உள்ளார்" என்றார்.






