பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும்- அஜித்பவார் கோரிக்கை


பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும்- அஜித்பவார் கோரிக்கை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:45 PM GMT)

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று அஜித்பவார் கோரிக்கை வைத்தார்.

மும்பை,

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று அஜித்பவார் கோரிக்கை வைத்தார்.

உயிருடன் விளையாடுகிறார்கள்...

மராட்டிய சட்டசபையில் நேற்று முன்தினம் பாலில் கலப்படம் செய்வது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநிலத்தில் பால் உற்பத்தி நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் பால் சேகரிப்பு ஒரு கோடி லிட்டர் வரை உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பால் வியாபாரத்தை சில முறைகேடுகள் நுழைந்துள்ளன. பால் கலப்படம் செய்பவர்களின் ஒரு பெரிய சமூகம் பரவியுள்ளது. மாநிலத்தில் அதிகரித்துவரும் பால் கலப்படம் தொடர்பான பிரச்சினை மிகவும் தீவிரமானதாகும். அவர்கள் குழந்தைகள் குடிக்கும் பாலில் கலப்படம் செய்து, அவர்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகிறார்கள்.

மரண தண்டனை

மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் பாலில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் மரண தண்டனை விதிக்க சட்டம் கொண்டுவர முன்மொழியப்பட்டது. ஆனால் ஜனாதிபதி அனுமதிக்காததால் அந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இருப்பினும் இது தீவிரமான பிரச்சினை என்பதால் பாலில் கலப்படம் செய்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

மேலும் பால் வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில், "உபரி பால் உற்பத்தியின்போது பால் பவுடரை ஏற்றுமதி செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.


Next Story