உத்தவ் தாக்கரேவுக்கான பா.ஜனதாவின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன - சந்திரசேகர் பவன்குலே பேட்டி.

உத்தவ் தாக்கரேவுக்கான பா.ஜனதாவின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு உள்ளதாக பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறினார்.
நாக்பூர்,
உத்தவ் தாக்கரேவுக்கான பா.ஜனதாவின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு உள்ளதாக பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறினார்.
கூட்டணி பிளவு
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவால் பிளவை ஏற்படுத்திய ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரியாக பதவியேற்றார். தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். இந்தநிலையில் பா.ஜனதா மீண்டும் உத்தவ் தாக்கரேவுடன் கூட்டணி வைக்குமா? என பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
விவசாயிகள் தற்கொலை
இதற்கு பதில் அளித்த அவர், "முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கான பா.ஜனதாவின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. நாங்கள் எது குறித்தும் அவரிடம் ஆலோசிக்கவில்லை, எதிர்காலத்திலும் அப்படி செய்யப்போவதில்லை" என்றார். மராட்டியத்தில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்வதாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அவர், "தெலுங்கானா மாடலில் உள்ள குறைபாடுகள் என்ன என்பது பற்றியும், சந்திரசேகர் ராவ் சொல்லிக்கொண்டு இருப்பது என்ன, ஆனால் செய்வது என்ன என்பது பற்றியும் விரைவில் வீடியோ ஒன்று வெளியிடப்படும்" என்றார்.
போட்டியிட விரும்பவில்லை
அதேபோல முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆசிஷ் தேஷ்முக் பா.ஜனதாவின் இணைய இருப்பது குறித்து கூறிய அவர், "சட்டசபை தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், கட்சியை பலப்படுத்த வேலை செய்ய விரும்புவதாகவும் ஆசிஷ் தேஷ்முக் எங்களிடம் கூறியுள்ளார். காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி என்பதால் அதில் தொடர அவர் விரும்பவில்லை" என்றார்.






