கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் சரத்பவாருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்த பிரபுல் படேல் எம்.பி.

கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பிரபுல் படேல் எம்.பி, சரத்பவாருடன் எடுத்த படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
மும்பை,
கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பிரபுல் படேல் எம்.பி, சரத்பவாருடன் எடுத்த படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
கட்சியில் பிளவு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கடந்த ஜூன் மாதம் ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்தனர். ஆளும் கூட்டணியில் இணைந்ததை அடுத்து அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அஜித்பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவாருக்கு பதிலாக அஜித்பவாரை நியமித்துள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கும் உரிமை கோரி உள்ளது. தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளவு குறித்து வருகிற 6-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
சரத்பவாருடன் புகைப்படம்
இந்த நிலையில் அஜித்பவாரின் அணியில் முக்கிய தலைவர்களின் ஒருவராக புரபுல் படேல் எம்.பி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, " புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒரு சிலிர்ப்பு மிக்க நாள். புதிய ராஜ்யசபா கட்டிடம் அற்புதம், இந்த தருணத்தை மாண்புமிகு சரத்பவாருடன் பகிர்ந்துகொள்வது இன்னும் சிறப்பானது. உண்மையிலேயே இது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள்" என்றார். இந்த நிலையில் இந்த படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறியதாவது:-
மிக உயர்ந்த தலைவர்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மிக உயர்ந்த தலைவர் என்பதால் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர். அனைத்து தரப்பை சேர்ந்தவர்களும் அவருடன் படம் எடுப்பதை பெருமையான உணர்கிறார்கள். புரபுல் படேல் நாடாளுமன்றத்தில் சக உறுப்பினர் என்பதாலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு என்பதாலும், படேலின் வேண்டுகோளுக்கு இணங்க சரத்பவார் அவருடன் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார். இது அவருடைய முதிர்ச்சியை பறைசாற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






