சூனியம் வைத்ததாக சந்தேகத்தில் திராவகம் வீசப்பட்ட முதியவர் 17 நாள் போராடி சாவு

ஜாப்ராபாத் பகுதியில் சூனியம் வைத்ததாக சந்தேகத்தில் திராவகம் வீசப்பட்ட முதியவர் 17 நாள் போராடி உயிரிழந்தார்
ஜல்னா,
ஜல்னா மாவட்டத்தில் உள்ள ஜாப்ராபாத் தாலுகா மஸ்ருல் கிராமத்தை சேர்ந்த முதியவர் ஸ்ரீரங் செஜுல்(வயது 85). இவர் தங்களுக்கு சூனியம் வைத்துள்ளதாக அதே ஊரை சேர்ந்த நந்து செஜுல் மற்றும் பாஸ்கர் சேபல் ஆகிய 2 சந்தேகப்பட்டனர். எனவே இருவரும் முதியவர் மீது முன்விரோதம் கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவதன்று வீட்டில் தூக்கிக்கொண்டு இருந்த ஸ்ரீரங் செஜுல் மீது இருவரும் சேர்ந்து திராவகத்தை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த முதியவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைகாக சந்திரபதி சம்பாஜி நகரில் உள்ள அரசு ஆஸ்ப்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அஸ்பத்திரியில் 17 நாட்களாக உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த முதியவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய நந்து செஜுலை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரது வீட்டில் இருந்த திராவக பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். பாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






