டெல்லி அரசின் மது கொள்கையை கண்டித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம்


டெல்லி அரசின் மது கொள்கையை கண்டித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம்
x

டெல்லி அரசின் மது கொள்கைக்கு எதிராக அன்னா ஹசாரே, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம்

மும்பை,

டெல்லி அரசின் மது கொள்கைக்கு எதிராக அன்னா ஹசாரே, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மது கொள்கைக்கு எதிராக கடிதம்

டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா டெல்லியில் மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க கடந்த மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

இந்தநிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீங்கள் எழுதிய 'சுவராஜ்' புத்தகத்திற்கு நான் முன்னுரை எழுதி உள்ளேன். அந்த புத்தகத்தில் நீங்கள் மது ஒழிப்புக்கு ஆதரவாக எழுதி இருந்தீர்கள். எனவே எல்லோரும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருந்தார்கள். ஆனால் முதல்-மந்திரி ஆன பிறகு கொள்கையை மறந்தது போல தெரிகிறது. எனவே டெல்லி அரசு புதிய மது கொள்கையுடன் வந்து உள்ளது. இந்த புதிய கொள்கை மது விற்பனை, பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் எந்த இடத்திலும் மதுபான கடைகளை திறக்க முடியும். இந்த கொள்கை ஊழலை ஏற்படுத்தும். மேலும் இது மக்கள் நலன் சார்ந்த கொள்கை இல்லை. எனினும் நீங்கள் இந்த புதிய மது கொள்கையை கொண்டு வர முடிவு செய்து உள்ளீர்கள்.

அதிகார போதை

மதுக்கு அடிமையாவது போல, அதிகாரத்திற்கு அடிமையாவதும் இருக்கிறது. அந்த அதிகார போதையில் நீங்கள் மூழ்கிவிட்டது போல தெரிகிறது. வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை சேதப்படுத்தி பிறந்த கட்சி, மற்ற கட்சிகளின் பாதையில் செல்வது வேதனை அளிக்கிறது. முதல்-மந்திரி ஆன பிறகு நீங்கள் லோக்பால், லோக் ஆயுக்தாவை மறந்துவிட்டீர்கள். வலுவான லோக் ஆயுக்தாவை கொண்டு வர நீங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

ஆனால் டெல்லி அரசு மக்களுக்கும், பெண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மது கொள்கையை கொண்டு வருகிறது. இதன் மூலம் நீங்கள் சொல்வதற்கும், செய்வதற்கும் பெரிய இடைவெளி இருப்பது தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story