மராட்டியத்தில் அசாம் பவன் கட்டப்படும்- ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

மராட்டியத்தில் அசாம் பவன் கட்டப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் அசாம் பவன் கட்டப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.
எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் பயணம்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி ஆட்சியை கவிழ்த்த போது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் 11 நாட்கள் தங்கி இருந்தார். இந்தநிலையில் அவர் 2-வது முறையாக நேற்று முன்தினம் அவரது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றார். அவர், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் கவுகாத்தில் உள்ள காமாக்யா தேவி கோவிலில் ஆதரவாளர்களுடன் சாமி தாிசனம் செய்தார்.
பின்னர் அவர் ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார். இந்தநிலையில் நேற்று ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஆட்சியை கவிழ்க்க அசாமில் தங்கியிருந்த போது செய்த உதவிக்காக ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு நன்றி கூறினார். மேலும் 2 பேரும் இருமாநில உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
நவிமும்பையில் அசாம் பவன்
இந்த சந்திப்புக்கு பிறகு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மராட்டிய மாநிலம் நவிமும்பையில் அசாம் பவன் கட்ட ஒப்புதல் வழங்கியதாக முதல்-மந்திரி அலுவலகம் அறிவித்து உள்ளது. இதேபோல அசாமில், மராட்டிய பவன் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
நவிமும்பையில் அசாம் பவன் கட்டப்படுவது குறித்து சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், "நவிமும்பையில் ஏற்கனவே அசாம் பவன் உள்ளது. எல்லா மாநிலமும் மும்பையில் நிலம் வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் மராட்டியத்துக்கு எந்த மாநிலத்திலும் இடமில்லை. ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னாள் காங்கிரஸ்காரர். ஷிண்டே சிவசேனாவை சேர்ந்தவர். 2 பேரும் கட்சி மாறி முதல்-மந்திரி ஆனவர்கள். எனவே அவர்களுக்குள் ஒத்துப்போகும்.
அசாம் மக்கள் மும்பை மற்றும் மராட்டியத்தின் மற்ற பகுதியிலும் மகிழ்ச்சியாக, அமைதியாக வாழ்கின்றனர். காமாக்யா தேவி நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். எனவே அவர் நீதி வழங்குவார் என உறுதியாக இருக்கிறோம்" என்றார்.






