மராட்டியத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் தப்பிய கொள்ளையர்கள்

மராட்டியத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயன்றனர். உள்ளே பணம் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் தப்பினர்.
மும்பை,
மராட்டியத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயன்றனர். உள்ளே பணம் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் தப்பினர்.
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் மாஸ்வான் விலேஜ் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று அதிகாலை 2 மணியளவில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் பணத்தை கொள்ளையடிக்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். உடைத்து பார்த்தபோது அதில் பணம் இல்லாமல் காலியாக இருந்தது. நீண்ட நேரம் போராடி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தும் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் அங்கு இருந்து தப்பி சென்றனர். இந்தநிலையில் பொழுது விடிந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருக்கும் தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
பணம் தப்பியது
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து மனோர் போலீஸ் நிலைய அதிகாரி கூறுகையில், " சில சமூகவிரோதிகள் அதிகாலை வேளையில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து உள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரம் மற்றும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தனர். எனினும் ஏ.டி.எம். பழுதாகி இருந்ததால் அதில் பணம் எதுவும் வைக்கப்படவில்லை" என்றார். மூட்டை கணக்கில் பணத்தை அள்ளி விடலாம் என்று கருதி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளை ஆசாமிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.






