பசு காவலர்கள் மீது தாக்குதல் நடக்காமல் தடுக்க வேண்டும் - போலீசாருக்கு சபாநாயகர் உத்தரவு

பசு காவலர்கள் மீது தாக்குதல் நடக்காமல் தடுக்க வேண்டும் என போலீசாருக்கு சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் உத்தரவிட்டுள்ளார்.
மும்பை,
பசு காவலர்கள் மீது தாக்குதல் நடக்காமல் தடுக்க வேண்டும் என போலீசாருக்கு சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் உத்தரவிட்டுள்ளார்.
நாந்தெட், நாசிக் சம்பவம்
நாந்தெட்டில் கடந்த வாரம் 32 வயது பசு காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவர், நண்பர்களுடன் கால்நடை கடத்துவது தொடர்பாக சோதனை நடத்தியபோது ஒரு கும்பல் தாக்கியதில் உயிரிழந்தார். அதே நேரத்தில் நாசிக்கில் கடந்த சனிக்கிழமை மாட்டிறைச்சி கடத்தி செல்வதாக சந்தேகப்பட்டு பசு காவலர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் மும்பை குர்லா பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபரை அடித்து கொலை செய்தது. நாசிக் சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு இருக்கிறதா என அந்த கட்சி கேள்வி எழுப்பி இருந்தது.
போலீசாருக்கு சபாநாயகர் உத்தரவு
இந்தநிலையில் மாநிலத்தில் பசு காவலர்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என போலீசாருக்கு சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பக்ரீத் கொண்டாட்டத்தின் போது, அதிகளவில் பசு மாடுகள் கொல்லப்படலாம் என்ற அச்சம் சில அமைப்பினர், தொண்டு அமைப்பினரிடம் நிலவி வருவது குறித்து மாநில சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. மற்றும் நாந்தெட் போலீஸ் சூப்பிரண்டுடனான சந்திப்பில் பேசினேன். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாந்தெட் உள்ளிட்ட இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு பணி, சிறப்பு படை அமைத்து பதற்றமான பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன். மாநில எல்லையை சீல் வைத்து கால்நடை கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்க வேண்டாம் என கூறியுள்ளேன். மேலும் பசு காவலர்கள் மீது எந்த தாக்குதலும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






