பால்தாக்கரே உதவியாளர்கள் ஷிண்டே அணியில் இணைந்தனர்


பால்தாக்கரே உதவியாளர்கள் ஷிண்டே அணியில் இணைந்தனர்
x
தினத்தந்தி 27 Sep 2022 2:00 AM GMT (Updated: 27 Sep 2022 2:01 AM GMT)

பால்தாக்கரேவிடம் சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றிய உதவியாளர்கள் ஷிண்டே அணியில் இணைந்து உள்ளனர்.

மும்பை,

பால்தாக்கரேவிடம் சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றிய உதவியாளர்கள் ஷிண்டே அணியில் இணைந்து உள்ளனர்.

பால்தாக்கரே உதவியாளர்கள்

சிவசேனா கடந்த ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. இதில் பெரும்பாலான எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ளனர். ஆனால் தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பிக்க கட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளார்.

இதில் தங்களது அணி தான் உண்மையான சிவசேனா என்பதை வெளிப்படுத்தும் வகையில் உத்தவ்தாக்கரேவால் ஓரங்கட்டப்பட்ட மூத்த தலைவர்களை தனது அணிக்கு இழுத்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று தானேயில் பால்தாக்கரேவிடம் நீண்டகாலம் உதவியாளர்களாக இருந்த சம்பா சிங் தாபா, மோரேஷ்வர் ராஜி ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்தனர். 2 பேரையும் சால்வை அணிவித்து ஏக்நாத் ஷிண்டே அவரது அணியில் இணைத்து கொண்டார்.

தீவிர சிவசேனா பற்றாளரான சம்பா சிங் தாபா 27 ஆண்டுகள் பால்தாக்கரேவின் உதவியாளராக இருந்தார்.

இதேபோல மோரேஷ்வர் ராஜி 35 ஆண்டுகளாக மாதோஸ்ரீயில் பணியாற்றியவர் ஆவார். அவர் தான் பால் தாக்கரேவுக்கு வரும் போன் அழைப்புகளை எடுத்து பேசுவார்.

உண்மையான சிவசேனா

பால்தாக்கரேவிடம் நீண்டகாலமாக பணியாற்றிவர்களை வரவேற்று ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், "நவராத்திரி பண்டிகையின் போது கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த உற்சாகம் இந்த நேரத்தில் அவசியமான ஒன்றாக உள்ளது.

சம்பா சிங் தாபா, மோரேஷ்வர் ராஜி ஆகியோர் பால் தாக்கரேவின் நிழல் போல இருந்தவர்கள். நாங்கள் உண்மையான சிவசேனா என்பதால் அவர்கள் 2 பேரும் எங்கள் அணியில் இணைந்து உள்ளனர்" என்றார்.


Next Story