அசைவ உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் ஜெயின் அமைப்பினர் மனு


அசைவ உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் ஜெயின் அமைப்பினர் மனு
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அசைவ உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் ஜெயின் அமைப்பினர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

மும்பை,

அசைவ உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் ஜெயின் அமைப்பினர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

விளம்பரத்துக்கு தடை

மும்பை ஐகோர்ட்டில் ஜெயின் அமைப்பினர் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சிலர் அசைவ உணவு சாப்பிட விரும்பினால், அதை அவர்கள் சுதந்திரமாக செய்யலாம். அதே நேரத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் உள்ள இடத்தில், அசைவ உணவை காட்டுவது சரியானது அல்ல. இது சைவம் சாப்பிடும் நபர்களின் அடிப்படை மற்றும் அரசியல் சாசன உரிமையை பாதிக்கிறது.

இதேபோல பத்திரிகை, டி.வி. மற்றும் இணையதளங்களில் அசைவ உணவு விளம்பரத்தை தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்.

எச்சரிக்கை வாசகம்

மேலும் அசைவ உணவு பாக்கெட்டுகளில் அது உடல்நலனுக்கு கேடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறவேண்டும். அசைவ உணவு விளம்பரங்கள் பறவைகள், விலங்குகள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கிறது. இதுகுறித்து சட்டப்பிரிவு 51ஏ (ஜி) எதிரானது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி கொடுக்க அதிகளவில் விலங்குகள், பறவைகள், கடல் உயிரினங்கள் இரக்கமின்றி கொல்லப்படுகின்றன.

மேலும் இறைச்சி, மீன், கோழி, இறால் போன்ற விளம்பரங்கள் ஜெயின் சமூகத்தினர் மற்றும் சைவ உணவு சாப்பிடும் நபர்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் அசைவ உணவு விளம்பரங்கள் சைவம் சாப்பிடும் மக்களின் நம்பிக்கை, அமைதியை துன்புறுத்தும் வகையில் உள்ளது.

தடைவிதிக்க வேண்டும்

விளம்பரங்கள் சைவ உணவு சாப்பிடும் இளைஞர்களை அசைவ உணவு சாப்பிட தூண்டுகிறது. சைவ உணவு சாப்பிடும் மக்கள் ஈர்க்க கூடிய அசைவ உணவு விளம்பரங்களுக்கு இரையாகி விடுகின்றனர். குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பொது வீதி, சமயவழிபாட்டு தலங்கள் அருகில் அசைவ உணவு விற்கவும், விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது வெளியில் அசைவ உணவு விளம்பரத்துக்கு தடை விதிக்கப்பட்டால், பத்திரிகை, டி.வி., இணைதள விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.


1 More update

Next Story