திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க அவசர ஒப்புதல்- கவர்னரிடம் பா.ஜனதா புகார்


திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க அவசர ஒப்புதல்- கவர்னரிடம் பா.ஜனதா புகார்
x

மாநிலத்தில் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரமாக திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என கவர்னருக்கு பா.ஜனதா புகார் தெரிவித்து உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மாநிலத்தில் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரமாக திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என கவர்னருக்கு பா.ஜனதா புகார் தெரிவித்து உள்ளது.

திட்டங்களுக்கு ஒப்புதல்

மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் முகாமிட்டு உள்ளதால், ஆளும் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வசம் உள்ள இலாகாக்களில் கடந்த சில நாட்களாக அவசர, அவசரமாக திட்டங்களுக்கு நிதி வழங்க ஒப்பதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த ஜூன் 20 முதல் 23-ந் தேதிக்குள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி வழங்க ஒப்புதல் வழங்குவது தொடர்பாக 182 அரசு உத்தரவுகள் (ஜி.ஆர்.) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 70 சதவீத உத்தரவுகளை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வசம் உள்ள துறைகள் வெளியிட்டுள்ளன.

17-ந் தேதி 107 உத்தரவுகள்

இதேபோல 17-ந் தேதி 107 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் வசம் உள்ள சமூகநீதி, நீர்வளத்துறை, திறன் மேம்பாடு, வீட்டு வசதி, நிதி, உள்துறையில் அதிக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் வசம் உள்ள பழங்குடியின மேம்பாட்டு துறையில் மட்டும் ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சிவசேனாவை பொறுத்தவரை மராத்தி மொழி, சுற்றுலா துறை சார்பில் ஒரு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கவர்னரிடம் புகார்

இந்தநிலையில் மாநில அரசு அவசரமாக பிறப்பிக்கும் உத்தரவுகளில் தலையிடுமாறு கவர்னருக்கு பா.ஜனதா புகார் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர் பிரவின் தாரேக்கர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு எழுதிய கடிதத்தில், "48 மணி நேரத்தில் மட்டும் மகாவிகாஸ் அகாடி அரசு சுமார் 160 அரசு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இதில் சந்தேகம் உள்ளது. எனவே கவர்னர் இதில் தலையிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.


Next Story