திருட்டு செல்போனில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

திருடப்பட்ட செல்போனில் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
திருடப்பட்ட செல்போனில் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல்
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 9-ந்தேதி அதிகாலை 1.55 மணி அளவில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய ஆசாமி பைகுல்லா உள்பட 4 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதிகாலை 3.50 மணி அளவில் வெடித்து சிதற போவதாகவும் தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பைகுல்லா, அக்ரிபாடா போலீசார் வெடிகுண்டு பிரிவு படையினருடன் இணைந்து ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
திருட்டு செல்போன்
விடிய, விடிய நடந்த வேட்டையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் மர்ம ஆசாமி புரளியை கிளப்பியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்த நம்பரை கொண்டு விசாரித்ததில் பாண்டுப் சோனாப்பூரை சேர்ந்த ரசாக்கான் (வயது45) என தெரியவந்தது. இவரை பிடித்து நடத்திய விசாரணையில், அவரது செல்போன் திருடப்பட்டதாக தெரிவித்தார். இதனால் போலீசார் திருடிய செல்போனில் இருந்து மிரட்டல் விடுத்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






