கோரேகாவில் 20-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

மும்பை,
மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 20-வது மாடியில் 13 வயது சிறுவன் பால்கனியில் கடந்த 2-ந்தேதி இரவு 8.15 மணி அளவில் விளையாடி கொண்டிருந்தான். சிறுவனின் தாய் சமையல் அறையில் இருந்தார். தந்தை வெளிநாட்டில் உள்ளார்.
இந்த நிலையில் பால்கனியில் விளையாடிய சிறுவன் திடீரென பிடி நழுவி 20-வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான். இது பற்றி அறிந்த சிறுவனின் தாய் கட்டிட காவலாளி உதவியுடன் விழுந்து கிடந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆரேகாலனி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 20-வது மாடியில் இருந்து சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






