நாசிக்கில் கடத்தப்பட்ட தொழில் அதிபர் குஜராத்தில் மீட்பு; மந்திரி சகன்புஜ்பால் நலம் விசாரித்தார்

நாசிக்கில் கடத்தப்பட்ட தொழில் அதிபர் குஜராத்தில் மீட்பு; மந்திரி சகன்புஜ்பால் நலம் விசாரித்தார்
x
தினத்தந்தி 3 Sep 2023 7:45 PM GMT (Updated: 3 Sep 2023 7:45 PM GMT)

நாசிக்கில் தொழிலதிபரை கடத்தி சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மீட்கப்பட்ட தொழிலதிபரை மந்திரி சகன்புஜ்பால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நாசிக்,

நாசிக்கில் தொழிலதிபரை கடத்தி சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மீட்கப்பட்ட தொழிலதிபரை மந்திரி சகன்புஜ்பால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

காரில் கடத்தல்

நாசிக்கில் கஜ்ரா குழுமத்தின் சேர்மனாக இருந்து வருபவர் ஹேமந்த் பராக் (வயது51). இவர் கடந்த 2-ந்தேதி காலை 9.30 மணி அளவில் இந்திராநகரில் உள்ள வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் முன் வந்து நின்றது. பின்னர் வலுக்கட்டாயமாக அவரை காரில் போட்டு மர்மநபர்கள் கடத்தி சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் அங்குஷ் ஷிண்டே, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

குஜராத்தில் மீட்பு

இதற்கிடையில் நேற்று அதிகாலை கடத்தி செல்லப்பட்ட ஹேமந்த் பராக் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு தான் குஜராத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்க குஜராத் மாநிலம் நவ்சாரிக்கு சென்றனர். அவரை மீட்டு பத்திரமாக அழைத்து வந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி சென்ற கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மந்திரி சகன் புஜ்பால் மீட்கப்பட்ட தொழில் அதிபரின் வீட்டிற்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.

Next Story