மராட்டியத்தில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம்- முதல்-மந்திரி ஷிண்டே தகவல்

மராட்டியத்தில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாத போதிலும் அரசு முழு திறனுடன் செயல்படுகிறது என்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாத போதிலும் அரசு முழு திறனுடன் செயல்படுகிறது என்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
தாமதம்
மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர். பொறுப்பேற்று ஒரு மாதம் முடிந்தும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஷிண்டேவும், பட்னாவிசும் மட்டுமே அரசை நடத்தி வருகின்றனர். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.
குறிப்பாக மாநிலம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
விரைவில் விரிவாக்கம்
இந்தநிலையில் மராட்டியத்தில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புனேயில் நிருபர்களிடம் கூறுகையில், "விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும். மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாத போதும், அரசு முழு திறனுடன் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் நலன் சார்ந்து பல்வேறு முடிவுகளை எடுத்து உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட அனுமதி வழங்கி உள்ளோம். மழை தண்ணீரை வறட்சி பாதித்த மரத்வாடா மண்டல பகுதிக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்." என்றார்.
----






