மும்பையில் சாலைகளுக்காக 5 ஆண்டுகளில் மாநகராட்சி செலவிட்ட ரூ.12 ஆயிரம் கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை- மிலிந்த் தியோரா வலியுறுத்தல்


மும்பையில் சாலைகளுக்காக 5 ஆண்டுகளில் மாநகராட்சி செலவிட்ட ரூ.12 ஆயிரம் கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை- மிலிந்த் தியோரா வலியுறுத்தல்
x

5 ஆண்டுகளில் மும்பை சாலைகளுக்காக மும்பை மாநகராட்சி செலவிட்ட ரூ.12 ஆயிரம் கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மிலிந்த் தியோரா கோரிக்கை வைத்தார்.

மும்பை,

5 ஆண்டுகளில் மும்பை சாலைகளுக்காக மும்பை மாநகராட்சி செலவிட்ட ரூ.12 ஆயிரம் கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மிலிந்த் தியோரா கோரிக்கை வைத்தார்.

ரூ.12 ஆயிரம் கோடி

மழைக்காலங்களில் மும்பையில் சாலைகள் சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சி அளிப்பதை காண முடிகிறது. இந்த குண்டும், குழியுமான சாலைகள் சில நேரங்களில் உயிரை காவு வாங்குகின்றன.

இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் எம்.பி. மிலிந்த் தியோரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2017 முதல் 2022-ம் ஆண்டுக்குள் சாலைகளுக்காக மும்பை மாநகராட்சி ரூ.12 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆண்டு பட்ஜெட்டில் 10 சதவீதமாகும்.

சூறையாடுபவர்கள்...

இருப்பினும் மும்பை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குண்டும், குழியுமான சாலைகளை துணிச்சலுடன் எதிர்கொள்கின்றனர். இவர்கள் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியை சூறையாடுபவர்கள் என்பதை அறிந்துகொள்ள மக்கள் தகுதியானவர்கள் ஆவர். எனவே அவர் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இந்த சாலை பிரச்சினை என்பது வெறும் பனிப்பாறையின் நுனி மட்டுமே, இதுமட்டும் இன்றி மும்பை மாநகராட்சி ஆண்டுக்கு ரூ.45 கோடி அல்லது 5 ஆண்டுகளுக்கு ரூ.225 கோடியை சாலைகள் பராமரிக்கவும், சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை அகற்றவும் செலவிடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோசமான பின்விளைவு

இதேபோல காங்கிரஸ் தலைவர் ரவி ராஜாவும், தியோராவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மும்பையில் சாலைகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடியை மாநகராட்சி செலவிட்டுள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மும்பை மாநகராட்சி சாலைகளை சீரமைக்க பயன்படுத்தும் குளிர் கலவை முறை எப்போதும் மோசமான பின் விளைவுகளையே கொடுத்துள்ளது. ஆனால் நிர்வாகம் இதை இன்னும் வலியுறுத்துகிறது. இது சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே சாலை திட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

வெள்ள பாதிப்பு

இதுகுறித்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே, "சிவசேனாவும், பா.ஜனதாவும் மும்பை மாநகராட்சியை ஆட்சி செய்ய தொடங்கியதில் இருந்து மும்பை மழைநீரில் மூழ்கி விட்டது. காங்கிரஸ் மேயர் பதவியில் இருந்தவரை மும்பை நகரம் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை" என்றார்.

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் சட்டசபையில் மும்பை மாநகராட்சி ஊழல் குறித்து சிறப்பு தணிக்கை நடத்தப்படும் என்று தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இவ்வாறு பேசி உள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.

மும்பை மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story