பிரிவினை தினம் தொடர்பான சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை கவலை அளிக்கிறது; சரத்பவார் கூறுகிறார்


பிரிவினை தினம் தொடர்பான சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை கவலை அளிக்கிறது; சரத்பவார் கூறுகிறார்
x
தினத்தந்தி 21 Aug 2023 1:15 AM IST (Updated: 21 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

பிரிவினை தினம் தொடர்பான சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கைக்கு சரத்பவார் கவலை தெரிவித்து உள்ளார்.

மும்பை,

பிரிவினை தினம் தொடர்பான சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கைக்கு சரத்பவார் கவலை தெரிவித்து உள்ளார்.

சரத்பவார் கவலை

இந்தியா, பாகிஸ்தான் பிரிந்த ஆகஸ்ட் 14-ந் தேதி பிரிவினை தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சி.பி.எஸ்.இ. அதன் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரிவினை தினத்தை அனுசரிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. பிரிவினை தினம் தொடர்பாக சி.பி.எஸ்.இ. அதன் கீழ் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது கவலை அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இது தொடர்பாக மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த பள்ளி திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:- பிரிவினையின் போது ஏற்பட்ட சூழல் குறித்து மாணவர்களுக்கு கூறுமாறு சி.பி.எஸ்.இ. அதன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது கவலை அளிக்கிறது. ரத்த ஆறுக்கு இடையே நாடு பிளவுப்பட்டது தான் பிரிவினையின் வரலாறு. ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். பல சிந்தி சமூகத்தினர் இந்தியாவுக்கு வந்தனர். பஞ்சாப்பிலும் அதே நிலை தான் நிலவியது. அங்கு இருந்த பல முஸ்லிம்கள் பாகிஸ்தான் சென்றனர்.

இளம் தலைமுறையினரிடம்...

சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை விவகாரத்தில் மராட்டிய அரசு எதுவும் செய்ய முடியாது. ஆனால் அவர்கள் சுற்றறிக்கை தொடர்பான தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். தேசிய மற்றும் சமூக ஒற்றுமையை பொறுத்தவரை இளம் தலைமுறையினரிடம் இத்தகைய எண்ணங்களை (பிரிவினை வன்முறை) விதைப்பது தவறானது ஆகும். எந்த ஒரு விஷயமும் சமூகத்தில் மோதலை உருவாக்காமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சரத்பவார் பேசிய விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே, பா.ஜனதாவை சேர்ந்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story