குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்பு; தாய்க்கு ஆபத்து: 15 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க முடியாது


குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்பு; தாய்க்கு ஆபத்து: 15 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை  கலைக்க அனுமதிக்க முடியாது
x
தினத்தந்தி 26 Jun 2023 7:15 PM GMT (Updated: 27 Jun 2023 4:43 AM GMT)

கர்ப்பத்தை கலைக்கும் நடைமுறையின்போது குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்பு மற்றும் தாய்க்கு ஆபத்து ஏற்படும் என்பதால் 15 வயது சிறுமியின் 7 மாத குழந்தையை கலைக்க அனுமதிக்க முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

கர்ப்பத்தை கலைக்கும் நடைமுறையின்போது குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்பு மற்றும் தாய்க்கு ஆபத்து ஏற்படும் என்பதால் 15 வயது சிறுமியின் 7 மாத குழந்தையை கலைக்க அனுமதிக்க முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

7 மாத கர்ப்பம்

மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளையில், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் தாய் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தனது 15 வயது மகள் பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போய் விட்டாள். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தோம். போலீசார் தனது மகள் ராஜஸ்தானில் ஒரு ஆணுடன் வசித்து வருவதை கண்டுபிடித்து மீட்டனர். மேலும் தனது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தற்போது அவள் 28 வார (7 மாதம்) கர்ப்பமாக இருக்கிறாள். கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட அவளின் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.வி.குகே மற்றும் ஒய்.ஜி.கோப்ரகடே ஆகியோர் மருத்துவ குழுவின் ஆலோசனையை கேட்டனர். அதன்படி மருத்துவ குழுவினர் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அனுமதிக்க முடியாது

பாதிக்கப்பட்ட சிறுமி 28 வார கர்ப்பமாக இருப்பதால், கர்ப்பத்தை கலைக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளும்போது குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர். அப்போது குழந்தை வளர்ச்சியடையாமல் குறையுடன் பிறக்க வாய்ப்பு இருப்பதாகவும், குழந்தையின் தாய்க்கும் ஆபத்து ஏற்படலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க முடியாது. கர்ப்பத்தை கலைக்கும் நடைமுறையின் மூலம் இன்று உயிருள்ள குழந்தை பிறக்க போகிறது என்றால், இன்னும் 12 வாரங்களுக்கு பிறகு இயற்கையாகவே குழந்தை பிறக்க ஏன் அனுமதிக்க கூடாது. குழந்தை நன்கு வளர்ச்சியடைந்து, நிறைமாத குழந்தையாக பிரசவிக்கப்பட்டால், எந்த குறைபாடும் இருக்காது. குழந்தையை குறைப்பிரசவத்தில் இந்த உலகிற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்காது. அந்த குழந்தையை பிறர் தத்தெடுப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கும். பின்னர் மனுதாரர் குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுக்க விரும்பினால், அதை செய்வதற்கான சுதந்திரம் தாய்க்கு உண்டு. பிரசவம் வரை பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


Next Story