ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்


ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 20 Oct 2023 7:30 PM GMT (Updated: 20 Oct 2023 7:30 PM GMT)

ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொலை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொலை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கொடூர கொலை

ரெயில்வே பாதுகாப்பு படை வீரராக இருந்தவர் சேத்தன்சிங் சவுத்ரி. இவர் கடந்த ஜூலை 31-ந் தேதி ஜெய்பூர்- மும்பை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணியில் இருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தனது கையில் இருந்த தானியங்கி துப்பாக்கியால் தனது உயர் அதிகாரியான உதவி சப்- இன்ஸ்பெக்டர் திகாராம் மீனாவை சுட்டுத்தள்ளினார். பின்னர் ரத்தவெறி அடங்காத அவர் ரெயிலின் வெவ்வேறு பெட்டியில் இருந்த 3 பயணிகளை கொடூரமாக சுட்டுக்கொலை செய்தார். இதைத்தொடர்ந்து ரெயிலில் இருந்து குதித்து தப்பிஓட முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு போரிவிலியில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

1,206 பக்க குற்றப்பதிரிக்கை

இந்தநிலையில் ரெயில்வே போலீசார் நேற்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 1,206 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதற்கிடையே போலீசார் தாக்கல் செய்த மனு ஒன்றில், "விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளி சேத்தனை நேரில் ஆஜர்படுத்துவது ஆபத்தானது என்பதால் காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கை செசன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றவேண்டும்" என கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது. மேலும் வழக்கு விசாரணையை 2-ந் தேதிக்கு கோர்ட்டு தள்ளிவைத்தது.


Next Story