கலெக்டர் அலுவலக கூட்டத்தில் மந்திரி- எதிர்க்கட்சி தலைவர் இடையே மோதல்; வேகமாக பரவிய வீடியோ


தினத்தந்தி 7 Aug 2023 7:45 PM GMT (Updated: 7 Aug 2023 7:45 PM GMT)

அவுரங்காபாத் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மந்திரி சந்தீபன் பும்ரே மற்றும் அம்பாதாஸ் தன்வே இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

அவுரங்காபாத்,

அவுரங்காபாத் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மந்திரி சந்தீபன் பும்ரே மற்றும் அம்பாதாஸ் தன்வே இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

கடும் வாக்குவாதம்

அவுரங்காபாத் மாவட்ட பொறுப்பு மந்திரி சந்தீபன் பும்ரே. இவர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் உள்ளார். மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரான அம்பாதாஸ் தன்வே உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியில் அங்கம் வகிக்கிறார். இருவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது தொகுதியில் தாலுகா வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை அம்பாதாஸ் தன்வே கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதில், அம்பாதாஸ் தன்வே பொறுப்பு மந்திரி பதவி யாரோ ஒருவரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று காட்டமாக கூறுகிறார். அதற்கு பதில் அளித்த பொறுப்பு மந்திரி சந்தீபன் பும்ரே " ஆம் இப்போது எங்களுடைய சொத்துதான்" என்று கூறுகிறார்.

நிதானத்தை கடைப்பிடித்தோம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்பாதாஸ் தன்வே கூறியதாவது:- பொறுப்பு மந்திரி பதவியை தங்களுடைய சொத்து என்று தான் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் நானும், மந்திரி பும்ரேவும் முன்பு ஒன்றாக வேலை செய்துள்ளோம். எனவே தான் நாங்கள் நிதானத்தை கடைப்பிடித்தோம். இல்லையெனில் இந்த பிரச்சினை வேறுவிதமாக சென்றிருக்கும். இவ்வாறு அவர் கூறினார். மந்திரி சந்தீபன் பும்ரே கூறுகையில் " எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர்களிடம் இருந்து அதிக நிதி கோரிக்கை எழுந்தது" என்றார்.


Next Story