மத்திய அரசை கண்டித்து ராஜ்பவன் நோக்கி பேரணி செல்லமுயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது


மத்திய அரசை கண்டித்து ராஜ்பவன் நோக்கி பேரணி செல்லமுயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
x

மத்திய அரசை கண்டித்து ராஜ்பவன் நோக்கி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மத்திய அரசை கண்டித்து ராஜ்பவன் நோக்கி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ராஜ் பவன் நோக்கி பேரணி

மத்திய அரசின் தவறான கொள்கைகள், விலைவாசி உயர்வு, அத்தியவாசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. ஆகியவற்றை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் ராஜ்பவன் நோக்கி பேரணியாக செல்லப்போவதாக அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து காலை காங்கிரஸ் கட்சியினர் தென்மும்பையில் உள்ள சட்டசபை வளாகம் முன் திரண்டனர். அவர்கள் மத்திய அரசின் தவறான கொள்கைகள், விலைவாசி உயர்வு, அக்னிபத் திட்டம், அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. போன்றவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வகையில் தென்மும்பை ஹேங்கிங் கார்டனில் இருந்து ராஜ்பவன் நோக்கி பேரணியாக செல்ல இருந்தனர். போராட்டத்தை அடுத்து சட்டசபை வளாகம் முன் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

கைது

இந்தநிலையில் சட்டசபை வளாகத்தில் இருந்து ராஜ்பவன் நோக்கி காங்கிரஸ் கட்சியினர் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி முன்னோக்கி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே, முன்னாள் மந்திரிகள் பாலாசாகேப் தோரட், வர்ஷா கெய்க்வாட், நசீம்கான், சந்திரகாந்த் ஹன்டோரே, மும்பை தலைவர் பாய் ஜக்தாப் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்தனர்.

அரசுக்கு பயம்

போலீசாரின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் மந்திரி பாலாசாகேப் தோரட் கூறுகையில், "ஆங்கிலேயா்கள் ஆட்சியில் கூட அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த 'இ.டி.' (ஏக்நாத் ஷிண்டே -தேவேந்திர பட்னாவிஸ்) ஆட்சியில் அதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது" என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் கூறுகையில், "மோடி அரசால் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை. சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காக தெருவில் இறங்கி போராடும் காங்கிரசை பார்த்து ஷிண்டே - பட்னாவிஸ் அரசு ஏன் பயப்படுகிறது?. எங்கள் தலைவர்களும், கட்சியினரும் போராட்டத்தை தொடங்கும் முன்பே கைது செய்யப்பட்டனர். மும்பையில் மட்டும் சுமார் 10 ஆயிரம் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

இதேபோல அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story